சார்வாகனின் ”யானையின் சாவு” கதையைப் படித்தேன்.
முதல் முறை படித்ததுமே என் குழந்தைகளின் வளர்நிலைகளை நினைத்து நான் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.
மறுநாளும் படித்தேன். மறுநாளும் படித்தேன்.
பின் இன்று மகளுக்கு அதனை வாசித்தும் காட்டினேன்.
இப்படி எனக்கும் என் குழந்தைகளின் மனநிலையோடு விளையாண்டு பழக்கம் தான். அதனை அற்புதமாக ஒரு கதையாக எப்படி வடிக்கத்தோன்றியதோ அவருக்கு..
குழந்தை இல்லாத போதும் பொம்மையானை அவரோடு விளையாடியதும் முரண்டியதும் சாத்தியமே.. கையில் வைத்திருக்கும் கார், பையனுடைய காருடன் ரேசுக்கு போனாலோ, பாம்பும் ஏணியுமாய் எங்கள் காய்கள் மேலேறி கீழிறங்கும்போதோ குழந்தையோடு சேர்ந்து குழந்தையாய் நானும் இருந்திருக்கிறேன் .நான் ஒரு பெரிய குழந்தையோ?
வெளியூர் போய்விட்டு வீடு வந்து, யானை எங்கே? காணாமப்போக்கிட்டியா இல்ல காட்டுக்கு ஓடிப்போய்விட்டதா? என்று அதட்டல் அழுகையைப்போல வெளிவரும்போது, காட்டுக்கு ஓடிப்போய்விட்டதா என்ற கேள்வி குழந்தையை விட தகப்பன் அதை நிஜயானையாக கற்பனை செய்தது அழகாய் தெரிகிறது. டேய் புது விளையாட்டு ஒன்று என்று யானையைப்பற்றீய கேள்விகளை அலட்சியப்படுத்தும் குழந்தையின் பின் பரிதாபமாய் போகிறாரே இந்த அப்பா..
இது உண்மை இல்லை என்று நினைப்பவர்கள் குழந்தையோடு விளையாடதவர்களாக இருக்கலாம். :)
செத்துப்போன யானையின் சடலம் ”நான் மரம் யானையில்லை” என்று முனகிவிட்டு மறுபடியும் செத்துப்போச்சு. அவனுக்கு ஒன்னும் புரியவில்லை.
-----------------------------
கிணற்றில் விழுந்த சோகம் - வ . ஸ்ரீனிவாசன்
இந்தக்கதையைப் படிக்கும் போதே எனக்கு நேராகவே அந்த காட்சியைக் கண்டது போல ஒரே சிரிப்பாக வந்தது. இதையும் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றியது.
இன்று இக்கதையையும் மகளுக்கு வாசித்து காண்பித்தேன். வானொலியில் கதை வாசிக்கிறவர்களின் கதையைப் போல பாவங்களோடும் நாடகத்தன்மையோடும் வாசித்தேன் . மகளும் பரிட்சைக்கு படிப்பதற்கு நடுவில் கிடைத்த இடைவேளையாக ரசித்துக்கொண்டிருந்தாள்.
பூனையை பயமுறுத்தி தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டுவதற்கு முன்பே அதற்காக பயந்து அழும் இந்திரா , ஒவ்வொருவரிடமும் இந்திராவை காட்டிக்கொடுக்கும் கோபுவும், இயல்பாய் முருகா முருகா ராமா ராமா வந்துடிடிம்மா பூனையம்மா என்று இறைஞ்சும் எதிர்போர்ஷன் மாமா, ஒவ்வொருவரும் கண் முன்னே வந்தார்கள். வந்ததும் பூனை விழுந்திருப்பது தெரிந்து காபி குடிக்க உள்ளுக்கு போய்விட்டார்களே என்று அவர் மேலும் கோவம் வந்தாலும் பின்னர் ராமா ராமா என்று இறைஞ்சிய போதும், அவர் மனைவி வெக்கப்பட்டு என்னன்னா இது என்றாலும் கூட பூனைக்காய் அவர் கவலைப்பட்டும் .. கடைசியில் பூனையை எடுத்துக்கொடுத்த பையனை ஸ்வாமிநாதனாட்டம் வந்து எடுத்துக்கொடுத்தாயே என்ற அன்புடன் நெட்டிமுறிக்கும்போது
நல்ல மனுசந்தான்யா இவரு ..இவரப்போய் ..என்றும் நினைச்சிக்கிட்டேன்.
ராகவன் கிணற்றில் விழுந்த பூனைக்கும் தன் வேலை தேடும் நிலைக்குமாய் கடைசியில் எதோ ஒரு ஒற்றுமையாக நினைச்சுக்கிறான். தங்கை வருத்தப்படாமலிருக்க பூனையைக் காப்பத்த போராடினது அருமைதான் ஆனா அவன் நிலை கிணற்றில் விழுந்த பூனையைப்போல அவனுக்கு தோன்றி இருக்கும்போல..ம்.
நல்ல பையன் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சிடனுமே முருகான்னு எனக்கு கதை முடியும் போது தோணிடுச்சு.. இந்நேரம் கிடைச்சிருக்குமில்ல கதை வெளிவந்து பலகாலமாகிடுச்சே..:)
-------------------------
இவ்விரண்டு கதைகளும் இருப்பது ..
புத்தகம் : இந்த நூற்றாண்டு சிறுகதைகள் வால்யூம் 3
கலைஞன் பதிப்பகம்